GM Foods arriving on our plate!

February 3, 2022 - Reading time: 12 minutes

மரபணு மாற்றிய உணவு உங்கள் தட்டிற்கு வருகிறது!

மரபணு மாற்றிய உணவுகள் பற்றிய வரைவு விதிமுறைகளை, 2021 நவ., 15ல், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டது. அதாவது, மரபணு மாற்றிய உணவுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது. இதனால் என்ன பிரச்னை; இதை தடுக்க முடியுமா என்பதை பார்ப்போம். அதற்கு முன் ஒரு சிறிய 'ரீவைண்ட்' இதோ...

இன்று வரை, இந்தியாவில், உணவும், உணவு பயிரும் மரபணு மாற்றத்தில் இருந்து தப்பி வந்துள்ளது. பருத்திக்கு மட்டும் உணவு அல்லாத பயிர் என்ற போர்வையில், மரபணு மாற்றம் அனுமதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2009- - 10ல், மரபணு மாற்றிய கத்தரிக்காய், பி.டி., கத்தரிக்காய் என்ற பெயரில் நம் நாட்டில் நுழைய முயற்சி நடந்தது.

நாடெங்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், நாடெங்கும் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தினார். அவற்றில், விவசாயிகள் முதல் விஞ்ஞானிகள் வரை எதிர்ப்பு தெரிவித்ததால், பி.டி., கத்தரிக்காயின் அறிமுகம் கைவிடப்பட்டது. 'விதை பேராயுதம்; அதை தனியாரிடம் விட்டு வைக்கலாகாது' எனக் கூறி, 'அது பற்றி நாடு தழுவிய விவாதம் தேவை; நாடாளுமன்றத்திலும் விவாதம் தேவை' என அமைச்சர் அறிவித்தார்.

மேலும், 'சுற்றுச்சூழலில் மரபணு மாற்றிய பயிரின் நீண்டகால தாக்கத்தை அறியும் வகையில், ஆய்வு நடத்தப்பட வேண்டும். உற்பத்தியின் உயிரி பாதுகாப்பை நிறுவும் வரை தடை நீடிக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.அதெல்லாம் நடக்கும் வரை மரபணு மாற்றிய உணவு பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், கூறியபடி இன்று வரை எந்த ஆய்வும், விவாதமும் நடக்கவில்லை.

கொல்லை வழியாக...


அப்படிப்பட்ட ஆய்வும், விவாதமும் நடந்தால் ஒரு காலத்திலும் இந்தியாவுக்குள் நுழைய முடியாது என்பது, பன்னாட்டு விதை மற்றும் உணவு நிறுவனங்களுக்கு தெரியும். வாசல் வழியாக வர முடியவில்லை என்பதால், இப்போது கொல்லை வழியாக வர முயற்சி செய்கின்றனர். அதன் விளைவு தான், உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு விதிமுறைகள். இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தால், வெளிநாட்டில் இருந்து, பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், எண்ணெய், கால்நடை தீவனம் வடிவில் மரபணு மாற்றிய உணவும் வரும்.மேலும், உள்நாட்டில் தயாராகும் பதப்படுத்தப்பட்ட உணவுக்கு இடுபொருளாக மரபணு மாற்றிய தானியங்களும் பிற விளை பொருட்களும் வரும்.

ஆபத்து என்ன?


* மரபணு மாற்றிய உணவு, ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது என இன்னும் ஆணித்தரமாக நிரூபிக்கப்படவில்லை.இதற்கான அத்தாட்சியை உணவு பாதுகாப்பு ஆணையத்தின் வரைவு விதிமுறைகளிலேயே பார்க்கலாம். குழந்தைகள் உணவில், மரபணு மாற்றப்பட்ட உணவு சேர்க்கப்படக் கூடாது என்கிறது வரைவு விதிமுறை

* இதுவரை நடத்தப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஆய்வுகளும், பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வறிக்கைகளும், மரபணு மாற்று பயிர் மற்றும் உணவின் தீய விளைவுகளை தெரிவிக்கின்றன.இதை ஒரு புத்தகமாக தொகுத்து, மரபணு அற்ற இந்தியாவிற்கான கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ளனர். அது பற்றிய தகவலை http://indiagminfo.org/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்

* சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் எடுத்து வரப்பட்ட மரபணு மாற்று உணவு விதைகளால், ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.சமீபத்தில் நம் நாட்டில் இருந்து ஏற்றுமதியான அரிசியில் மரபணு மாற்று எச்சம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, பல கொள்கலன்கள் நிராகரிக்கப்பட்டன. இது, விதை இறையாண்மையை பாதிப்பதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

* இன்றும் பெரும்பான்மையான நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை மறுதலிக்கின்றன. நாம் மட்டும் ஏன் முந்திக் கொள்ள வேண்டும்?

வரைமுறையில் குளறுபடி


மரபணு மாற்று பயிர், உணவை கண்காணிக்க வேண்டியது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழுள்ள ஜி.ஈ.ஏ.ஸி., எனப்படும் மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு. ஆனால், இவர்கள், பொறுப்பற்ற முறையில், 'உணவு பாதுகாப்பு ஆணையம் பார்த்துக் கொள்ளும்' என நழுவி விட்டனர்.

உணவு பாதுகாப்பு ஆணையத்தில், இதை கண்காணித்து ஒழுங்குபடுத்த வல்லுனர்கள் கிடையாது. மரபணு மாற்று உணவை விற்க வருவோர், வெறுமனே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சான்றிதழ் பெற்று, ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்கிறது வரைவு விதிமுறை.

இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மதிப்பீடு எவ்வாறு செய்யப்படும்; அதில் என்னென்ன சோதனைகள் உண்டு என்பது பற்றி தகவல் இல்லை. சார்பற்ற பொது ஆய்வுக்கும் பரிந்துரை இல்லை. ஒப்புதல் வழங்குவதில் எந்தெந்த அதிகாரிகள், அறிஞர்கள், நிபுணர்கள் இருப்பர் என்பதும் சொல்லப்படவில்லை. ஒப்புதல் பெற்ற பொருட்கள் சந்தைக்கு வந்த பின், அவற்றால் தீமை ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க எந்த வழியும் செய்யப்படவில்லை.

இப்படி, பல்வேறு ஓட்டைகளோடு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இறையாண்மையை பாதிக்கும் இவ்வளவு முக்கியமான விஷயத்தில் முன்னெச்சரிக்கை அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.ஆனால், உணவு பாதுகாப்பு ஆணையம் அக்கறை இல்லாமல் பல விதிகளை வகுத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சவுகரியமாக சமரசம் செய்துள்ளது. [வரைவு விதிமுறைகளை https://fssai.gov.in/notifications.php?notification=draft-notification என்ற இணைய தளத்தில் முழுமையாக வாசிக்கலாம்.]

தடுப்பது எப்படி?


கடந்த 2009- - 10ல் பி.டி., கத்தரிக்காய் பிரச்னை வந்த போது தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.  ஆனால், இப்போது இந்த மாநிலங்களிடம் கருத்து கேட்கப்படவில்லை.  இது மாநிலங்களின் இறையாண்மையை பாதிக்கும் விஷயம். அதனால் உள்ளூர் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டு இது பற்றி பேச வலியுறுத்தலாம். மாநில அரசையும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தலாம். வரும் 5ம் தேதி வரை வரன்முறை விதிகள் பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தனி நபர்களாகவோ, அமைப்புகளாகவோ, விவசாயக் குழுவாகவோ regulation@fssai.gov.in என்ற மின்னஞ்சலுக்கு கருத்துக்களை அனுப்பலாம். தெரிந்தவர், அறிந்தவரையும் மின்னஞ்சல் அனுப்ப ஊக்குவிக்கலாம். உங்கள் கருத்துகளை பதிவு செய்வதன் மூலம் நீங்கள் உண்ணும் உணவு பற்றிய விபரம் தெரிவதற்கான உரிமை மற்றும் பாதுகாப்பான உணவை தேர்வு செய்யும் உரிமையை நிலைநாட்ட முடியும்.

Ananthoo's consumer awareness article on backdoor entry of GM foods published in today's Dinamalar (03 Feb 2022)

Categories